புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசியதாவது: அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் வழங்கி வருகிறது. 1952-ல் அம்பேத்கர், மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பிரதமர் மோடி குறை கூறி வருகிறார்.
ஆனால் அதில் உண்மை இல்லை. தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு எஸ்.ஏ. டாங்கேவும், வி.டி. சாவர்க்கரும்தான் காரணம் என்று அம்பேத்கர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதுதான் உண்மை.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சட்டமேதை அம்பேத்கரின் திட்டங்கள், ஆசைகளை நிறைவேற்றத் தயாராக இல்லை. இதுவே உண்மை. அம்பேத்கரை நாங்கள்தான் மதிக்கிறோம் என்று உதட்டளவில் மட்டுமே பாஜக பேசுகிறது. மனதில் இருந்து அல்ல. பொய் வேடம் போட்டுக்கொண்டு அம்பேத்கர் பெயரை பாஜக கூறி வருகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி கூறி வருகிறது.
இதுதொடர்பாக அண்மையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் முடிவு செய்துள்ளோம். தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.