சென்னை: மெரினா லூப் சாலையில் பொது போக்குவரத்தை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் பொது வாகன போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் மெரினா முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை பேரணியாக வந்து நொச்சிகுப்பம் லூப் சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நொச்சிக்குப்பம் முதல் முள்ளிக்குப்பம் வரை உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தியவாறும், கருப்பு உடைகள் அணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மெரினா லூப் சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்ததால் இந்த சாலை நுழைவு பகுதியில் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு, அந்த வழியாக வாகனங்கள் செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணிக்காக முன்னெச்சரிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் குறித்து நொச்சிகுப்பம் மீனவர் சங்கத்தை சோ்ந்த பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, மெரினா காமராஜர் சாலையில் இருந்து சாந்தோம் சாலைக்கு செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை தவிர்க்க மெரினா லூப் சாலை ஒரு வழி சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது மெட்ரோ பணிகள் முடிந்த பின்பும் இந்த சாலை பொது போக்குவரத்து சாலையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தினந்தோறும் இந்த வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, அடிக்கடி வாகன ஓட்டிகளுக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. இது மீனவர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, லூப் சாலையில் பொது வாகன போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும்.
தீர்வு கிடைக்கும் வரையில் இதுகுறித்து வாரம்தோறும் ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்களின் அனைத்து கோாிக்கைகளையும் அரசு ஏற்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு எங்கள் பகுதிக்கு யாரும் ஓட்டுகேட்டு வர அனுமதிக்கமாட்டோம். எங்களின் கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மெரினா லூப் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்காததால் நேற்று காலை 10 முதல் சாந்தோம் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.