வாராணசி: பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசம் வாராணசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான 44 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உத்தர பிரதேசம் வாராணசியில், பிரதமர் மோடி இன்று 44 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து வாராணசி மண்டல ஆணையர் கவுசல் ராஜ் சர்மா கூறியதாவது:
வாராணசியில் ஊரக மேம்பாட்டு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இங்கு 130 குடிநீர்த் திட்டங்கள், 100 புதிய அங்கன்வாடி மையங்கள், 356 நூலகங்கள், பிந்ரா பகுதியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கல்லூரி ஒன்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ராம் நகர் பகுதியில் போலீஸார் தங்கும் விடுதி, மற்றும் நான்கு கிராம சாலைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சாஸ்திரி படித்துறை மற்றும் சாம்னே படித்துறை ஆகியவற்றில் ரயில்வே துறை மற்றும் வாராணசி மேம்பாட்டு ஆணையம் மூலம் மேற்கொள்ளப்படும் அழகுபடுத்தும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
44 திட்டங்கள்: பிரதமர் அடிக்கல் நாட்டும் 44 திட்டங்களில் 25, திட்டங்கள் ரூ.2,250 கோடி மதிப்பிலானவை. பெரும்பாலான திட்டங்கள் வாராணசியின் மின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்படுகின்றன. 15 புதிய துணை மின் நிலையங்கள், புதிய டிரான்ஸ்பார்மர்கள், 1,500 கி.மீ தூரத்துக்கு புதிய மின்வழித்தடங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
சவுக்காபடித்துறையில் 220 கிலோவாட் திறனுள்ள துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்படும். விமானம் நிலையம் தொடர்பான கட்டமைப்பு திட்டங்களும் வாராணசியில் மேற்கொள்ளப்படுகின்றன. விமானநிலைய விரிவாக்க திட்டத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது.
வாராணசியில் 3 மேம்பாலங்கள், சாலைகள் அகலப்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள் புதுப்பிக்கும் பணி ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். வாராணசியில் உள்ள ரோஹானியா மெகந்திகன்ச் என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மேடி இன்று உரையாற்றுகிறார். இதற்காக வாராணசியி்ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.