Site icon Metro People

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு நாளை தொடக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அரசு விரைவுப் பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ.4-ம் தேதி (வியாழன்) வருகிறது. வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறுஎன தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் வசிக்கும் வெளியூர்மக்கள் முன்கூட்டியே சொந்தஊர்களுக்குச் செல்ல திட்டமிடு வார்கள்.

விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக மக்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, அரசு விரைவு பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை,திருப்பூர், சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு, படுக்கை வசதி கொண்ட சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சிறப்பு பேருந்துகள்

தீபாவளிப் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள், விரைவு, சொகுசு பேருந்துகளில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கரோனா பாதிப்பால் கடந்த தீபாவளியின் போது பயணிகள் கூட்டம் பெரிய அளவில் இல்லை. இதனால், சிறப்பு பேருந்துகளும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.

கடந்த 2019-ல் தீபாவளியை யொட்டி சென்னையில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டில் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோ சனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version