சென்னை: கோடைகாலத்தை சமாளிக்க பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நீர்மோர், ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை, சென்னையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு நவ.21-ம் தேதி முதல் நடப்பாண் டில் ஜன.20-ம் தேதி வரை பயணம் செய்த பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.விஷால் என்பவருக்கு ஸ்கூட்டரையும், மதுரையைச் சேர்ந்த ஜெ.மணிகண்டன் என்பவருக்கு எல். இ.டி. டி.வி.யையும் சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கோடைகாலத்தை சமாளிக்க தினமும் நீர்மோர், ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மத்திய பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஏ.சி. அரங்கத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.