புதுச்சேரி: தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு மத குருக்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக திமுக அமைச்சர் பொன்முடி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையானது. அவரது இந்த பேச்சு ஆணவத்தின் உச்சமாகும். மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் செயலாகும்.
இந்து மத கடவுள்களையும், இந்து மத பெண்களையும் வாய் கூசும் அளவுக்கு விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு இதுவரை சிறுபான்மை மதத்தை சேர்ந்த தலைவர்கள் பெரிய அளவில் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளனர்.
பிற மதத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்காதது திமுகவை சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் அநாகரீகமான செயலை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிடும். அதே போன்று இந்து கடவுளை விமர்சனம் செய்தவர் திமுகவை சேர்ந்த அமைச்சர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த பல்வேறு மத குகுருமார்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.
அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கையான அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் முழு கல்வி உதவித்தொகை போன்று மீனவ சமுதாய மாணவ பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வருக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில்தில் சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மீன்வளத்துறை, அட்டவணை இனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்போது அந்த துறையில் உள்ள அதிகாரிகள் அதற்கான ஆணை கடிதம் மற்றும் கார்டுகளை மொத்தமாக சில எம்எல்ஏக்களிடமே கொடுத்து விடுகின்றனர்.
இவ்வாறு துறைகளிடம் இருந்து பெறக்கூடிய நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை கடிதம், தங்களது கட்சியை சேர்ந்த அலுவலகத்துக்கு பயனாளிகளை வரவழைத்து வழங்கப்படுகிறது. பொதுவாக அரசு சார்ந்த எந்த உதவிகளுக்கான ஆணை கடிதமும் அரசு அதிகாரிகளின் கைவசம் தான் இருக்க வேண்டும்.
தற்போது இதற்கு மாறாக எம்எல்ஏக்கள் கையில் இருப்பதால் பயனாளிகளுக்கு அந்த ஆணை கடிதத்தை கொடுக்கும் போது மாற்று கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பல விதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டு கூனி குறுகி அனுமதி கடிதத்தை பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து தலைமை செயலாளர் நலத்திட்ட உதவிகளை அரசு துறைகளின் மூலமே வழங்குவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு உணர்த்த வேண்டும்” என்றார்.