புதுடெல்லி: சர்வதேச அளவில் கடந்த நிதியாண்டில் ஐபோன்களுக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டதையடுத்து, இந்தியாவில் அதன் உற்பத்தி 60 சதவீதம் அதிகரித்தது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024-25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் ரூ.1.89 லட்சம் கோடியைத் தொட்டது. ஒட்டுமொத்த உற்பத்தியில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களின் மதிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரால் சீனாவிலிருந்து ஐபோன் ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் ஐபோன் உற்பத்தியை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு அமெரிக்காவின் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரிப்பதற்கு சாதகமாக மாறியுள்ளது.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி கடந்த 2024-25 (ஏப்ரல்-பிப்ரவரி) வரையிலான 11 மாத காலத்தில் ரூ.1.75 லட்சம் கோடியை தாண்டியது.இது, முந்தைய 2023-24- நிதியாண்டின் இதே காலகட்ட ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 54 சதவீதம் அதிகமாகும் என இந்திய செல்லுலார் எலக்ட்ரானிக்ஸ் அசோஷியேசன் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஆப்பிளின் ஐபோனின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது.