மறைந்த டேனியல் பாலாஜி நடித்துள்ள கடைசி படம், ‘ஆர்பிஎம்’. பிரசாத் பிரபாகர் இயக்கியுள்ள இதில் கோவை சரளா, ஒய்.ஜி.மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதை கோல்டன் ரீல் இன்டர்நேஷனல் புரொடக் ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜியின் ஓராண்டு நினைவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘ஆர்பிஎம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி முன்னோட்டத்தை வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குநர் பிரசாத் பிரபாகர் கூறும்போது, “ஒரு வீட்டை மாற்ற வேண்டும் என்றால் ‘பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்’ நிறுவனத்தை மக்கள் நாடுகிறார்கள். அதில் பணி புரிபவர்கள் சிலர் குற்றவாளிகளாக இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. ராம் பேக்கர்ஸ் மூவர்ஸ் என்பதன் சுருக்கம்தான் ‘ஆர்பிஎம்’. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் டேனியல் பாலாஜி மறைவு எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அவர், இதில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை ஏமாற்றவே முடியாது.
ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டுத் தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது, நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதைக் கேட்பார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடமும் மறக்க முடியாதது” என்றார்.