மதுரை: “காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் எதிர்ப்பேன், தமிழக மக்கள் வலதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசினார்.
மதுரை முனிச்சாலையில் இன்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: “காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். குழந்தைகள் முன்பு பெற்றோர்களையும், மனைவி முன்பு கணவனையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோன்ற இழி செயலை, பாவச் செயலை எந்த மதமும் ஆதரிப்பதில்லை.
இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும் இச்சம்பவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இங்குள்ள மதவாத சக்திகள் இதை அரசியலாக்க பார்க்கின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் பல விளக்கங்களை சொல்லிவிட்டு காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள்தான் காரணம் என அபாண்டமான விஷமத்தனமான கருத்தை சொல்லியிருக்கிறார்.
இந்த நேரத்தில் ஒன்றை சொல்கிறேன்… விடுதலைப் போராட்ட வீரர்கள் தன் உயிரை துச்சமென மதித்து எதற்கும் துணிந்தவர்கள். ஒருபோதும் இதுபோன்ற இழிவான செயல்களை செய்யமாட்டார்கள். அவர்கள் ராணுவம், போலீஸ், அரசியல் சக்திகள், அரசியல்வாதிகள் மீது எதிர்த்து தாக்குதல் நடத்துவார்கள். ஒருபோதும் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். இதில் இங்குள்ள இஸ்லாமிய சக்திகளுக்கு தொடர்பில்லை. ஆனால், மதவாத சக்திகள் வேறு மாதிரி கொண்டு போய் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.
இங்கு இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்று மதத்தினர் மீது வன்மம் கிடையாது. இச்சம்பவத்தை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வாக்கு வங்கியாக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்… இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இதுபோன்ற தீவிரவாத எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது. இந்த எண்ணங்களை யார் விதைக்கிறார்கள்? அதைத்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுக்கு முன்பே வலதுசாரி அரசியல் தலைதூக்கி வருகிறது எனச் சொன்னேன்.
வலதுசாரி அரசியல் என்பது சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி அவர்களை மோத விட்டு அதன் மூலம் வாக்கு வங்கியைப் பெறுவதுதான் வலது சாரி அரசியல் என்றேன். வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன். இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என அவர்கள் மிது தாக்குதல் நடத்துவது வலதுசாரி அரசியல். இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது சிங்கள இனவாத வலதுசாரி அரசியல்.
தமிழகத்திலும் சாதி, மதத்தின் பெயரால் கொலைகள் நடப்பதும் ஜாதி மத வலதுசாரி அரசியல். பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் மதம், சாதி அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்தகைய வலதுசாரி அரசியல் தமிழகத்திலிருந்து விட்டுப்போக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி, மதங்களின் அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடாது என என்பது அன்பான வேண்டுகோள்.
பஹல்காம் சம்பவத்துக்கு வலதுசாரி அரசியல்வாதிகள்தான் காரணம். இச்சம்பவம் மனிதநேயத்துக்கு, இஸ்லாத்துக்கு எதிரானது. தமிழக மக்கள் சாதி அரசியல், மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. இதற்கு மத்திய அரசிடம் போதிய பதில் இல்லை.
நூறு நாள் வேலைத் திட்டத்துக்குரிய நிதியை மத்திய அரசு குறைத்து வருகிறது. மத்திய பாஜக அரசு இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், மடைமாற்றவும் வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது சட்டத்துக்கு ஜனநாயக மாண்புக்கு, இஸ்லாமிய நலன்களுக்கு எதிரானது. இதனை மதிமுக முழு மனதுடன் எதிர்க்கிறது.
ஏழை எளியோருக்கு தொண்டு செய்வது இறைவனுக்கு செய்யும் கடமை என அரபுமொழியில் குரானில் 57, 58 வசனத்தில் அல்லா சொல்கிறார். அதனை நடைமுறைப்படுத்தவும், கடமைகளை ஆற்றத்தான் வக்பு சொத்துகள் கொண்டுவரப்பட்டன. அதன் மூலம் தர்காக்கள், மதரசாக்கள், பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பயனடையும் பயனாளிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. வக்பு சொத்துகள் மூலம் இஸ்லாமியர்கள் மட்டும் பயனடையவில்லை, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பலர் கல்வி நிறுவனங்கள் நடத்தகின்றனர். அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டு நிலங்களாக உள்ளன.
பல சமூகத்தினர் இஸ்லாமிய ஆன்மிகப் பணிகளுக்காக வக்பு சமூகத்துக்கு நிலங்களை தானம் கொடுத்துள்ளனர், இதன் மூலம் பன்முகத் தன்மையையும், ஒற்றுமையையும் காட்டுகிறது. திருத்தச் சட்டமானது இத்தகைய ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் கெடுக்கிறது. வக்பு வாரியத்தின் தடையில்லா சான்று வழங்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது பெரிய தவறாகும்.
மேலும் வக்பு வாரியத்திற்கு தானம் கொடுப்பவர்கள் 5 ஆண்டாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என சொல்வது பெரும் அபத்தமானது. மேலும் நிர்வாகத்தில் இஸ்லாமியர் தவிர மாற்று மதத்தினர் 2 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தியுள்ளனர். திருப்பதி கோயில் நிர்வாகத்தில் கிறிஸ்தவர்களை நியமிப்பது எவ்வளவு பெரிய தவறோ அதைப் போன்றதுதான் இதுவும்.
இஸ்லாமியர்களின் சொத்துக்களை, இறை சொத்துக்களை அவர்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பது தான் நீதி. அவர்களுக்குத்தான் நோக்கம் புரியும். நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களை வாரி வழங்கியுள்ளனர். இந்த நாட்டின் காவலர்களாக உள்ள இஸ்லாமியர்களை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
வைகோ 60 ஆண்டுகாலம் மத நல்லிணக்கத்துக்கு பாடுபட்டு மதவெறி அரசியல் தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என பாடுபட்டு வருகிறார். அவரது வழியில் நாமும் மதநல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும். எனவே இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இதற்காக மக்கள் மன்றத்தில் நீதி மன்றத்தில் மதிமுக தொடர்ந்து போராடும். மத, சாதி அரசியல், வன்மம் ஒழியட்டும், ஒழிக்கப்பட வேண்டும். மனிதநேயம் பரவட்டும், சகோதரத்துவம் வளரட்டும்” என்று துரை வைகோ பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.மாரநாடு, கே.பி.ஜெயராமன் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சுப்பையா நன்றி கூறினார். முன்னதாக, தெற்கு தொகுதி எம்எல்ஏ புதூர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், முருகன், ரொஹையா, எம்எல்ஏக்கள் சதன்திருமலைக்குமார், ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.முனியசாமி வரவேற்றார்.