“பதற்றத்தில் இருக்கிறேன்… அவ்வளவு மகிழ்ச்சி!” – ஆளுநர் விவகார தீர்ப்பும், பேரவையில் ஸ்டாலின் ரியாக்‌ஷனும்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து” என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, “எதிர்க்கட்சி” என பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதற்றத்தில் இருக்கிறேன் நான். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்று சமாளித்து ரியாக்ட் செய்தார்.

தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.8) காலை தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள்: > சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.

பிரிவு 200-ன்படி, முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைத்து மீண்டும் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். சபை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் அதன் பிறகு ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.

> குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.

> ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்துக்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

> ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைக்க / ஒப்புதல் அளிக்க ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. பொது விதியாக, ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.

> ஆளுநர் மாநிலத்தின் முறையான தலைவர் என்றும் அவர் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்துகிறார் என்றும் கடந்த கால அரசியலமைப்பு அமர்வு முடிவுகளை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “சற்று முன்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த சட்டப்பேரவையில் நாம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கியமான சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பியனுப்பினார்.

அந்த நிலையில், அவற்றை நாம் மீண்டும் இங்கே நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். இரண்டாவது முறை சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அரசியல் சட்டம் வரையறுத்திருந்த போதிலும், இவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததோடு, அதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார்.