Site icon Metro People

ஸ்ரீரங்கம் கோயிலின் விஐபி பாஸ் கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க கோயில் நிர்வாகம் சார்பில் பலருக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் திருவேங்கடம் யாதவ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்டத் தலைவர் மிலிட்டரி நடராஜன், மண்டலத் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் கோயில் இணை ஆணையரான மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று தங்களுக்கு ஏன் விஐபி பாஸ் வழங்கவில்லை எனக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் ‘அலுவலகத்துக்கு வாருங்கள். பேசிக் கொள்ளலாம். வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது’ என பதிலளித்ததாக தெரிகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, திருவேங்கடம் யாதவ் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாகவும், அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருவேங்கடம் யாதவ், மிலிட்டரி நடராஜன், சதீஷ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீஸார் நேற்று முன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version