Site icon Metro People

தனுஷ் பட காட்சியை எதிர்த்து வழக்கு: விசாரணைக்கு ஐஸ்வர்யா ஆஜராக உயர் நீதிமன்றம் விலக்கு

நடிகர் தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை (ஜூலை 15) ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதில் விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளை இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணை வந்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை ஆஜராக விலக்கு அளித்து, வழக்கை இறுதி விசாரணைக்காக ஆகஸ்ட் 10-ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் “கிரேமேன்” படப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால், சென்னை திரும்பிய பிறகு, மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

Exit mobile version