Site icon Metro People

பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு; 2-ம் கட்ட விசாரணையில் அதிகாரி அமுதாவிடம் 5 பேர் சாட்சியம்

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.அமுதா இன்று 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினார். இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திலுள்ள காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவுப்படி விசாரணை நடத்திய சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். மாநில மனித உரிமை ஆணையமும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் அவர் கடந்த 10-ம் தேதி விசாரணையை தொடங்கியிருந்தார். ஏற்கெனவே நடைபெற்றுள்ள விசாரணை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகியோர் அவரிடம் விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார்.

அப்போது, அம்பாசமுத்திரம் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, தலைமை காவலர் வின்சென்ட் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அத்துடன் பாதிக்கப்பட்ட எஸ். பூதப்பாண்டி என்பவரும் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில், 2-ம் கட்டமாக அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் 5 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள்,காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்துவதுடன், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பாசமுத்திரம் போலீஸ் நிலையங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்த விசாரணை அதிகாரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறை 324, 326, 506-1 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version