Site icon Metro People

கோயில் நகைகளை உருக்க தடை விதிக்கக் கோரி வழக்கு

கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற அறநிலையத் துறைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதுதொடர்பாக கடந்த செப்.22 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும் சென்னையைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் உயர் நீதின்றத்தில் பொதுநலமனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.

அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட முடியுமேயன்றி, மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிடவோ, வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டிபாசிட் செய்யவோ முடியாது.

வருவாயை பெருக்க வேண்டுமெனில் ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில்களில் உள்ள நகைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படவில்லை.

இந்த சூழலில் நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

பக்தர்கள் காணிக்கையாக, ஆபரணமாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரிகளின் இந்த முடிவு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Exit mobile version