Site icon Metro People

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அடைக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை அடைக்கப்படுகின்றன. அவை அடைக்கப்படும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்கின்றனர். மது அருந்துபவர்கள், சுற்றுப்புறத்தையும் அசுத்தப்படுத்திவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், மது அருந்தும் நபர்களால் தனியாக செல்பவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்றன.

காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபானக் கடைகளை திறந்துவைக்க, 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதி அனுமதிக்கிறது. இதற்கு ஏற்ப, பார்கள் இயங்கும் நேரத்தை மாற்றம் செய்தால் பொதுஇடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு டிசம்பர் 9-ம் தேதி மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அடைக்கப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Exit mobile version