Site icon Metro People

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான வழக்குகள்: இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக நாளை முடிவு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன், அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

1983ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக, தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் இன்று (ஆக. 24) விசாரணைக்கு வந்தபோது, வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வருவதால், அதைத் தடுக்கும் வகையில் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால், தடை விதிக்க அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் நாளை (ஆக. 25) முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதி குறித்தும் நாளை முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version