ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி, தற்போது நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ‘கடைசி விவசாயி’.
‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘கடைசி விவசாயி’. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
இறுதியாக, சோனி லைவ் ஓடிடி நிறுவனத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவானது. ஆனால், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டதால், ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது ‘கடைசி விவசாயி’. செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தின் நாயகனாக முதியவர் நல்லாண்டி நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்துள்ளார்.