Site icon Metro People

குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை வெள்ளிக்கிழமை (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை தொடங்கக் கூடாது. விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, செந்தில் பாலாஜி தரப்பில், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாதது ஆகிவிடும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத் துறை தரப்பில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக செந்தில் பாலாஜியை நாளை (பிப்.16) நேரில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.

அப்போது, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி மெமோ தாக்கல் செய்வதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மெமோவை பெற்றுக்கொள்வதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த நீதிபதி, பின்னர் மெமோவை தற்போது பெற்றுக்கொள்வதாகவும் அதன் மீது பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version