சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடமிருந்து 50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை 2018 மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்தியது. ஆரம்ப காலங்களில் அபராதம் செலுத்துவது அதிகமாக இருந்தபோதிலும், பின்னர் சாலை விதிகளை மீறும் பலர் அபராதம் செலுத்தவில்லை. இதையடுத்து, போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தனர்.
அதன்படி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி 10 அழைப்பு மையங்களைத் திறந்துவைத்தார். தொடர்ந்து மேலும் 2 அழைப்பு மையங்கள் சேர்க்கப்பட்டன.
இந்த 12 காவல் அழைப்பு மையங்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் குறித்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு வாரத்துக்குள் அபராதம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
தவறும்பட்சத்தில் மேற்படி வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த 50 நாட்களில் 2,73,284 வழக்குகள் தொடர்பாக ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த, மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வாகன ஓட்டுநர்களும், தங்கள் வாகனத்துக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, விரைவில் அபராதம் செலுத்த வேண்டும். மேலும், சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, அபராதம் செலுத்த வேண்டிய சூழல் இல்லாத நிலையை உருவாக்க உதவ வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.