டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை பாவினாபென் பட்டேல் உள்ளிட்ட வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள், வீராங்கனைகள் 9 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இதில், டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘கிளாஸ் 4’ பிரிவு (கால் பாதிப்பால் சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் போட்டி) அரை இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பாவினாபென் பட்டேல் உலகத் தர வரிசையில் 3-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் நேற்று முன்தினம் மோதினார். இப்போட்டியில் சீனவீராங்கனையை வென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ்ஸில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என வரலாறு படைத்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் நேற்றுவெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘தனது அபாரமான ஆட்டத்தால் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் மகள் பாவினாபென் பட்டேலை பாராட்டுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவர் வெளியிட்ட மற்றொரு வாழ்த்துச் செய்தியில், “தேசிய விளையாட்டு நாளான்று டோக்கியோ பாராலிம்பிக்சில் இந்தியாவுக்கு பதக்க மழை பொழிகிறது. உயரம் தாண்டுதல் மற்றும் வட்டு எறிதலில் ஆசிய சாதனையுடன் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ள நிஷாத் குமார், வினோத் குமார் ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘வெள்ளிப் பதக்கம் வென்று,இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பாவினாபென் பட்டேலுக்கு வாழ்த்துகள். உலகஅரங்கில் சாதனைப் பயணமும்,பதக்கக் குவிப்பும் தொடரட்டும். பாவினாபென் பட்டேலின் சாதனைக்கு அவரது தன்னம்பிக்கையும், மன உறுதியும்தான் காரணம். ‘என்னால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை’ என்ற அவரது வார்த்தைகள், அவருக்கு மட்டுமல்லாமல், சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மந்திரம்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.