Site icon Metro People

லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – உஷார் நிலையில் இந்தியா விமானப் படை

இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இரு தரப்பு ராணுவமும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இரு நாட்டு எல்லையான கிழக்கு லடாக் பகுதியில், சீன நாட்டின் போர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் அதிகாலை நான்கு மணி அளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதியில் இந்தியா ராணுவம் கண்காணிப்பு பணிகளுக்காக வைத்துள்ள ரேடாரின் மூலமாக இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இது மிகப் பெரிய தாக்கத்தையோ அச்சுறுத்தலையோ குறிப்பது அல்ல எனக் கூறியுள்ள இந்திய ராணுவம், இரு நாட்டின் எல்லை சூழலை கருத்தில் கொண்டு இந்தியத் தரப்பு தயார் நிலையில் உள்ளதாக விளக்கமளித்துள்ளது.

சில நாள்களுக்கு முன் இந்தோனேசியாவின் பாலி நகரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இரு நாட்டு எல்லையில் நிலவும் பதற்றமான சூழலை இயல்புக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு தரப்பும் பல்வேறு கட்டங்களில் அமைதிப் பேச்சுக்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.இந்த சூழலில் தான் சீனா ராணுவ விமானம் இந்திய வான் எல்லையில் அத்துமீறி பறந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதே லடாக் எல்லையில் தான் 2020ஆம் ஆண்டு சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

Exit mobile version