Site icon Metro People

கோவை சம்பவம் | என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைக்க அரசு காலதாமதம் செய்தது தவறு: ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்த பின் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு, 4 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டது மிகவும் தவறு என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கோவை நவக்கரை ஜெ.எஸ்.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்த ஆன்மிக பரிணாமத்தால் இந்தியா உருவாகிஉள்ளது. இதனால்தான் சனாதன தர்மம் என்று அழைக்கிறோம். கரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து நாம் பயன்பெற்றது மட்டுமின்றி 150 உலகநாடுகளுக்கு அவற்றை கொடுத்துள்ளோம். இது சனாதன தர்மத்தை நம் நாடு பின்பற்றுவதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு: கோவையில் கடந்த அக். 23-ம்தேதி நடக்கவிருந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் தக்க நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பெருமை தமிழக காவல்துறையைச் சேரும். ஆனால் அதற்கு பின் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க 4 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொண்டது மிகவும்தவறு.

தடயங்களை அழிக்க வாய்ப்பு: தீவிரவாதிகள் நேர மேலாண்மையை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றுவர். கால அவகாசம் வழங்கினால் அனைத்து தடயங்களையும் அழித்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. கோவையில் தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் கோவையில் உள்ளவர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிஎப்ஐ ஒரு தீவிரவாத அமைப்பு. தீவிரவாதம் மிக கொடியது. இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதனை ஒழிக்க மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். ஜகத்குரு ஸ்ரீ வீரசிம்மாசன மகா சம்ஸ்தான மடத்தைச் சேர்ந்தஜகத்குரு சிவராத்ரி தேஷிகேந்திர மகா சுவாமிஜி, சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன், ஜெ.எஸ்.எஸ் குழும நிர்வாகிகள் மஞ்சுநாத், சுரேஷ், பேட்சுர்மத், மகேஷ் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

Exit mobile version