குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் தனது 10ஆம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றது தான் இணையத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 35 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 36 மதிப்பெண் மட்டுமே எடுத்த இவர் தனது தன்னம்பிக்கையாலும் விடா முயற்சியாலும் தற்போது ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
குஜராத் மாநிலத்தின் பருச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா என்பவர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இவரின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை சத்தீஸ்கரை சேர்ந்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த ட்வீட் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியுள்ளது.
பகிரப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பார்க்கும் போது ஐஏஎஸ் அதிகாரியான துஷார் சுமேரா பத்தாம் வகுப்பில் மிக சராசரியான மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. குறிப்பாக, ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்ணான 35, 36 ஆகியவற்றை தான் எடுத்துள்ளார். இவர் பெரிதாக ஒன்றும் தேரமாட்டார் என அவரது பள்ளியில் நினைத்தபோது, தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் நாட்டின் மிக கடினமான தேர்வாகக் கருதப்படும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று 2021ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
சொந்த பள்ளியும், கிராமமும் துஷார் மீது நம்பிக்கை வைக்காவிட்டாலும், மனம் தளராது துஷார் தொடர் முயற்சியால் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தன்னைப் பற்றி அவனிஷ் கூறிய கருத்து துஷாரும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு பொதுத்தேர்வு, போட்டித் தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் மாணவர்கள் துஷாரை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.