அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பால் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்று ஏஇபிசி துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக வரி கொள்கை குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) துணைத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வணிகப் பரிமாற்றத்தில் உள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பொருளின் மதிப்புக்கு ஏற்ப கூடுதல் வரி விதித்துள்ளார். வரும் 9-ம் தேதி முதல் அமெரிக்கா, அதன் வர்த்தக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய வரிகளைக் கொண்டுள்ளது. புதிய வரிகள் அமெரிக்காவின் தற்போதைய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட அனைத்து இறக்குமதிகளுக்கும் பொருந்தும். இந்தியா 26 சதவீதம் என்ற வரி கட்டணத்தை எதிர்கொள்ளும்.
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு 35 சதவீதம் வர்த்தக பங்கை கொண்டதால் 26 சதவீதம் வரியானது செலவுகளை அதிகரிக்கும். இதனால், இந்திய தயாரிப்புகளுக்கு போட்டித்தன்மை குறைவாகும். இந்தியாவின் முக்கியப் போட்டியாளர்களான துருக்கி, பிரேசில் ஆகியவை குறைந்த வரியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க வர்த்தகர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும். இதனால் வர்த்தகத்தில் மாற்றம் ஏற்பட்டு, இந்தியாவின் ஏற்றுமதி மேலும் பாதிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் இந்தியாவின் முக்கியப் போட்டியாளர்கள். இவை 20 சதவீதம் வரியை எதிர்கொள்கின்றன. இது இந்தியாவைவிட குறைவானது. இதன் காரணமாக, இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படலாம். ஆனால், இந்த நாடுகள் ஆடை இறக்குமதியில் இந்தியாவையே சார்ந்திருப்பது நமக்கு சாதகமாகும்.
இலங்கை 44 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், கம்போடியா 49 சதவீதம், வங்கதேசம் 37 சதவீதம், சீனா 34 என பல்வேறு நாடுகளும் அதிக வரிகளை எதிர்கொள்கின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது 26 சதவீதம் என்பது குறைந்த வரியாகும்.
இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரிதாக ஆடை உற்பத்தியில் ஈடுபடாதது, இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இதன் மூலம், இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைந்து, அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் நமது நிலை சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.