Site icon Metro People

உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு, பாட்டில் தண்ணீர், குளிர்பானங்கள் கண்காணிப்பு: அமைச்சர் அறிவுறுத்தல்

இறைச்சி விற்பனை கடைகளில் தொடர் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், புகார்கள் மீது 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அலுவலக கூட்டரங்கில் அனைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் உரிமம் பெறுவதை உறுதி செய்யவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமம் முறையாக புதுப்பிக்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா பொருட்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வகை இறைச்சி, மீன், முட்டை, பால்பொருட்கள் ஆகிய உணவு விற்பனையகங்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர், குளிர்பானங்கள் காலாவதியான பிறகு விற்பனை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மேலும், உணவு தொடர்பாக பெறப்படும் புகார்களின் மீது காலம் தாழ்த்தாமல் 72 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் குறித்து புகார் அளித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து நியமன அலுவலர்களும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Exit mobile version