அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் சுமார் 12 ஆயிரம் இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவில் உரிமைகள் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள், LGBTQ ஆதரவாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் தேர்தல் சீர்திருத்த ஆர்வலர்கள் உட்பட 150- க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.
மேன்ஹேட்டன் தொடங்கி பாஸ்டன் வரையிலான முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில், அரசாங்க பணி ஆட்குறைப்பு, குடியேற்றம், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அமெரிக்கா தவிர்த்து லண்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நகரங்களில் இந்த போராட்டங்கள் நடந்துள்ளன. வாஷிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாம் காணும் இந்த தாக்குதல்கள் வெறும் அரசியல் சார்ந்தவை மட்டுமல்ல. அவை தனிப்பட்ட ரீதியிலானவை. அவர்கள் LGBTQ தொடர்பான புத்தகங்களைத் தடை செய்ய, ஹெச்ஐவி தடுப்பு நிதியைக் குறைக்க, நமது மருத்துவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்களை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள்” என்றனர்.
மற்றொரு போராட்டத்தில் கலந்து கொண்ட 64 வயது டயான் கோலிஃப்ராத் என்பவர் கூறும்போது, “உலகெங்கிலும் உள்ள எங்கள் நண்பர்களை இழக்கச் செய்து, எங்கள் சொந்த நாட்டில் உள்ள மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் இந்த மூர்க்கத்தனமான நிர்வாகத்திற்கு எதிராகப் போராட நியூ ஹாம்ப்ஷயரில் இருந்து பேருந்து மற்றும் வேனில் சுமார் 100 பேர் வந்துள்ளோம்” என்றார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிறு காலை புளோரிடாவின் ஜூபிடரில் நடந்த சீனியர் கிளப் சாம்பியன்ஷிப்பை காண சென்றிருந்தார். அப்போது அதற்கு அருகே உள்ள பாம் பீச் கார்டன்ஸ் அருகாமையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.