சென்னை: பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்? என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பதிவுக் கட்டண சலுகை மகளிர் பெயரில் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டுமே பெருந்தும் என்பதால், இந்த சலுகை, சொத்தை வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தாலோ, அல்லது பெண்கள் பெயரில் கூட்டாக வாங்கப்பட்டாலோ, சொத்தை வாங்குபவர்கள் அனைவரும் பெண்ணாக இருந்தாலோ பொருந்தும்.
ஒரு சொத்தை குடும்ப நபர்களுடன், குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து அதில் பெண்கள் பெயரில் வாங்கினால் இந்த சலுகை பொருந்தும். ஒரு சொத்தை குடும்ப நபர்கள் சேர்ந்து, பெண்கள் பெயரில் வாங்கினாலும் கட்டணச் சலுகை பொருந்தும்.
அதேநேரம், ஒரு சொத்தை கூட்டாக கணவன் – மனைவி சேர்ந்து வாங்கினாலோ, குடும்ப நபர்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலோ இந்த சலுகை பொருந்தாது. அதேபோல், குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து அதில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து வாங்கினாலோ, குடும்ப நபர்களுடன், வேறு நபர்கள் சேர்ந்து ஆண், பெண்கள் பெயரில் வாங்கினானோ சலுகை பொருந்தாது.
இதுதவிர, இந்த உத்தரவு தமிழக அரசின் அரசிதழில் வெளியிடும் தேதிக்கு முன்னர், பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கி பதிவு செய்யப்பட்ட பத்திரங்களுக்கு செலுத்தப்பட்ட பதிவுக்கட்டணம் திரும்பப் பெற முடியாது.
பதிவு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் நிலவும் சந்தை மதிப்பு, வழிகாட்டி மதிப்பின்படி சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும், இந்த சலுகை பெற, ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பகுதிகளாகப் பிரிக்கக் கூடாது.
சலுகையைப் பொறுத்தவரை, ஒரு 2400 சதுரஅடி காலி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பு ரூ.12 லட்சம் என்றால் அந்த மனையை இரண்டு 1200 அல்லது நான்கு 600 சதுரஅடிகளாகப் பிரித்து அல்லது பிரிபடாத ஆவணங்களாக வெவ்வேறு பெண்கள் பெயரில் பதிவு செய்தாலும் இந்த சலுகை பொருந்தும்.
அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பில், அடுக்குமாடி வீடு மற்றும் பிரிபடாத பாக மனை சேர்த்து ரூ.10 லட்சத்துக்குள் வந்தால், அந்த குடியிருப்பில் ஒரே பெண் பெயரில் எத்தனை வீடுகள் தனித்தனியாக வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தும்.
மேலும், ஒரு மனைப்பிரிவில் இரண்டு அல்லது 3 மனைகளை, தனித்தனி ஆவணம் மூலம் வாங்கும்போது, சந்தை வழிகாட்டி மதிப்பு ரூ.10 லட்சத்துக்குள் வரும் பட்சத்தில், ஒரே பெண் பெயரில் வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஆனால், சந்தை வழிகாட்டி மதிப்பு 2400 சதுரஅடிக்கு ரூ.12 லட்சம் என வரும்பட்சத்தில், சலுகையைப் பெற காலி மனையை 1200 சதுரடி அல்லது 600 சதுரடி என பிரித்தோ, பிரிக்கப்படாத ஆவணங்களாக ஒரே பெண் பெயரில் பதியும் பட்சத்தில் சலுகை பொருந்தாது. இதுதவிர சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் இந்த சலுகை பொருந்தாது.
சொத்து பதிவுக்குப்பின், கட்டிட ஆய்வு தேவைப்படும் நேரங்களில் மற்றும் கள ஆய்வுக்குப்பின் ரூ.10 லட்சத்துக்கு மேல் மதிப்பிடப்பட்டால் இந்த சலுகை பொருந்தாது.
சந்தை மதிப்பு நிர்ணயத்துக்காக ஆவணங்கள் அனுப்பப்படும் பட்சத்தில், சொத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு மேல் வந்தால் இந்த சலுகை பொருந்தாது.
இதில் ஏதேனும் தவறான சலுகை அளிக்கப்பட்டாலோ, உரியவர்களுக்கு சலுகை அளிக்கப்படாமல் புகார் பெறப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.