பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்தில் கண்டெய்னரில் இருந்த ரூ.8.96 கோடி மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் மாயமான சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூரில் தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த தனியார் நிறுவனத்துக்கு லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து வரவேண்டிய 39 டன் எடை கொண்ட 1,305 வெள்ளி பார்கள், இரு கண்டெய்னர்களில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுகத்துக்கு கடந்த மாதம் 30-ம் தேதி வந்தடைந்தது. அவ்வாறு வந்த வெள்ளி பார்கள், சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மூலம் இரு கண்டெய்னர் லாரிகள் மூலம் கடந்த 3-ம் தேதி காலை மண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்தது.
அப்போது, நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில், 1,305 வெள்ளி பார்களில், ரூ. 8.96 கோடி மதிப்புள்ள, 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி பார்கள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன அதிகாரிகள், கண்டெய்னர்களின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த இருந்த டிராக்கிங் டிவைஸ் கருவியை ஆய்வு செய்த போது, கண்டெய்னர்கள் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் உள்ள மத்திய தொழில்துறை கண்டெய்னர் யார்டில் இருந்த போது, ஒரு கண்டெய்னர் கடந்த 2-ம் தேதி இரவு திறக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனால், வெள்ளி பார்கள் மாயமாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தனியார் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கின் அதிகாரியான தாசரி ஸ்ரீஹரி ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், காட்டூர் போலீஸார், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தில் கண்டெய்னரில் வெள்ளி பார்களை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.