சென்னை: சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் 16 அணிகள் கலந்து கொண்டுள்ள கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 117 ரன்கள் வித்தியாசத்தில் சாய்ராம் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. 171 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சாய்ராம் அணி 19.5 ஓவர்களில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. இதையடுத்து ஆர்எம்கே கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் லயோலா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தியபாமா பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த சத்தியபாமா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய லயோலா அணி 13.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்எம்கே, லயோலா அணிகள் மோதவுள்ளன