திரையில் ‘ஒலி’யின் வரவு நாடகக் கலைக்குத் தேய்மானத்தையும் நாடகக் கலைஞர்களுக்குத் திரையுலகம் என்கிற புதிய வாசலையும் திறந்துவிட்டது. சலனப் படங்களில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத கம்பெனி நாடக நடிகர்கள், பேசும்படம் வந்ததும் திரையுலகின் மீது தீவிர ஈர்ப்பு கொண்டனர்.
அதற்குக் காரணம், நாடகங்களைப் பேசும் படம் அப்படியே பிரதியெடுத்ததுதான். தமிழ் பேசும்பட உலகம் 100 படங்கள் என்கிற எண்ணிக்கையைத் தொட முயன்ற முதல் 7 ஆண்டுகளுக்குள் நாடக உலகையே அது முழுவதுமாகச் சார்ந்து நின்றது.