இனி ஐ.எம்.பி.எஸ் முறை மூலம் ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை அனுப்பலாம்
IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பை 5 லட்ச ரூபாயாக ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது.
ஆங்கிலத்தில் Immediate Payment Service என்பதன் சுருக்கமே IMPS பரிவர்த்தனை என்பதாகும். ஆர்.டி.ஜி.எஸ், நெஃப்ட் போல ஆன்லைன் பணம் அனுப்பும் முறைகளில் IMPS ஒன்றாகும். இந்த முறையின் மூலம் காலதாமதமின்றி உடனடியாக பணம் அனுப்ப முடியும். அதாவது ஐஎம்பிஎஸ் முறை மூலம் பணம் அனுப்பும் போது, அனுப்புவரிடம் இருந்து பணம் கிடைக்க வேண்டியவருக்கு உடனடியாக பணம் கணக்கில் ஏறிவிடும். மேலும் இந்த பரிவர்த்தனையை இரவும், பகலும் எந்தவித நேரக் கட்டுப்பாடும் இன்றி 24/7 அனுப்ப இயலும். இதன் மூலம் எந்தவித காலதாமதமும் ஏற்படாது. எனினும் ஐஎம்பிஎஸ் முறை மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் ஐஎம்பிஎஸ் முறைக்கான தினசரி வரம்பை தற்போது ரிசர்வ் வங்கி 5 லட்ச ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இதனை இன்று (அக்டோபர் 8) அறிவித்தார்.
தற்போது ஐ.எம்.பி.எஸ் முறை மூலம் ஒரு நாளைக்கு 5 லட்ச ரூபாய் வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கும், வணிகர்களும் பெரிதும் பலன் தரக்கூடியது என வங்கித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆர்.டி.ஜி.எஸ் என்றால் என்ன?
பல்வேறு பணம் அனுப்பும் முறைகளில் ஆர்.டி.ஜி.எஸ்-ம் (Real Time Gross Settlement System) ஒன்றாகும். இந்த முறை மூலம் எந்தவித உச்சவரம்பும் இன்றி வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பிக் கொள்ள முடியும். ஆனால் இந்த முறை மூலம் குறைந்தபட்சமாக 2 லட்ச ரூபாயாவது அனுப்ப வேண்டும். முன்னர் இந்த முறைக்கு நேரக் கட்டுப்பாடு இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கிறது.
NEFT என்றால் என்ன?
NEFT மூலம் எந்தவித தனிநபரும், நிறுவனங்களும், கார்பரேட்களும் எலக்ட்ரானிக் முறையில் பணம் அனுப்பலாம். இதற்கும் உச்சவரம்பு என எதுவும் கிடையாது. இந்த முறையின் கீழ் பணம் அனுப்ப ஒவ்வொரு வங்கியும் வேறுபட்ட விதிகளை கொண்டிருக்கிறது,
முன்னதாக ஆர்.டி.ஜி.எஸ், NEFT போன்ற முறைகளில் பணம் அனுப்ப குறிப்பிட்ட தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.