புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் உரிமை கோரியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராமாயணத்தில் ராமரின் நண்பனான குகனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரில் ராமர் மற்றும் குகன் தொடர்பான கண்காட்சியை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய யோகி ஆதித்யநாத், முதல்வரின் மீனவர் திட்டத்தின் கீழ் 1,400 மீனவர்களுக்கு ரூ. 20 கோடி மதிப்பில் உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் போன்ற புராண இடங்கள் அதன் முக்கியத்துவத்தைப் பெறுவதை சிலர் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களின் வாக்கு வங்கி அவர்களுக்கு முக்கியம்.
வக்பு என்ற பெயரில், பிரயாக்ராஜ் நகரிலும், பிற நகரங்களிலும் உள்ள நிலங்களை அவர்கள் கைப்பற்ற முயன்றனர். நாங்கள் மகா கும்பமேளாவுக்கு ஏற்பாடு செய்தபோது, பிரயாக்ராஜில் உள்ள கும்பமேளாவும் வக்பு நிலம் என்று வக்ஃப் வாரியம் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டு உரிமை கோரியது. அது வக்பு வாரியமா அல்லது ‘நில மாஃபியா’ வாரியமா?
உத்தர பிரதேசத்திலிருந்த மாஃபியாக்களை நாங்கள் ஏற்கெனவே அழித்துவிட்டோம். வக்பு வாரியத்தின் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்தும் விதமாக, தற்போது வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறும்.” என்று தெரிவித்தார்.