Site icon Metro People

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் – இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றி, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று சீல் அகற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கடந்த 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள தெருவில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை திறக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தரப்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகத்துடன் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி, இன்று அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, சி.வி. சண்முகம் முன்னிலையில், மயிலாப்பூர் வட்டாச்சியர் ஜெக ஜீவன் ராம் அகற்றினார்.

Exit mobile version