ஒட்டன்சத்திரம்: ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.
ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் கோபத்தை, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற திமுகவின் அணுகுமுறை 2026 தேர்தலில் பலிக்காது.
வக்பு சட்டத் திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து இருக்கிறார். பல முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டதால்தான் இந்த சட்டத் திருத்தமே கொண்டுவரப்பட்டது.
வக்பு சொத்துகளை, அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே கபளீகரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த சட்டத் திருத்தம், வக்பு சொத்துகளை தனி நபர்கள் சொந்தம் கொண்டாடுவதை அனுமதிக்காது. இதை முஸ்லிம்கள் புரிந்துகொண்டால், சட்டத்தைப் பாராட்டுவர். கேரளாவில் கிறிஸ்தவ அமைப்புகள், தேவாலயங்களில் வக்பு சட்ட திருத்த மசோதாவை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்காமல் புறக்கணித்தது, தமிழக மக்களுக்கு திமுக அரசு செய்த துரோகம். தன்னால் ஒரு விஷயத்தை செய்ய முடியாது என்றால், எதிர்க்கட்சி கூட்டம் நடத்துவது முதல்வர் ஸ்டாலினின் பழக்கம்.
அண்ணாமலை தேசத்தின் சொத்து: மகத்தான, வீரியமிக்க இளம் தலைவர் அண்ணாமலை, கட்சிக்கு தொடர்ந்து பயன்பட்டு வருவார். அவர் தேசத்துக்கு கிடைத்த சொத்து. அவருக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். அவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வர்தான் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் மசோதா கொண்டு வந்தார். இதே மசோதாவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தபோது, பேராசிரியர் அன்பழகன் “ஜெயலலிதா செய்தது முட்டாள்தனம்” என்றார்.
இதற்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து விட்டுத்தான் செல்வார். அதுவரை அவரை மாற்றுவது என்ற பேச்சுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.