புதுடெல்லி: ‘‘வரலாற்று சிறப்பு மிக்க செய்திதாள் நிறுவனத்தை, சோனியா காந்தி குடும்பம் தனியார் தொழிலாகவும், ஏடிஎம்-ஆகவும் மாற்றியுள்ளது’’ என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் என்ற செய்திதாள்களை தொடங்க சுதந்திர போராட்ட வீரர்களிடம் நிதிபெற்று அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார்.
கடந்த 2008-ல் இந்நிறுவனம் முடங்கியது. இந்நிறுவனம் செய்திதாள்களை மீண்டும் வெளியிட, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ரூ.90.25 கோடியை வட்டியில்லா கடனாக பெற்றது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் கடன் மற்றும் சொத்துக்கள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்ப்டடது.
இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் 76 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் நிதிமுறைகேடு நடந்ததாக பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி நீதிமன்றத்தில் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி ரூ.752.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் போாரட்டம் நடத்துவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
போராட்டம் நடத்தும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஆனால் அரசு சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்து நேஷனல் ஹெரால்டுக்கு கொடுக்க உரிமை இல்லை. கார்பரேட் சதி மூலம் டெல்லி, மும்பை, லக்னோ, போபால், பாட்னா ஆகிய இடங்களில் உள்ள ஏஜெஎல் நிறுவனத்தின் பொதுச் சொத்துக்கள், யங் இந்தியா நிறுவனம் மூலம் சோனியா காந்தி குடும்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
யங் இந்தியா நிறுவனம் அறக்கட்டளை நிறுவனம். ஆனால், அது எந்த அறக்கட்டளை பணியை செய்தது. ரூ.90 கோடி கடனை ரூ.50 லட்சத்துக்கு தள்ளுபடி செய்துவிட்டு, பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது குற்றம்.
சுதந்திரத்துக்காக போராடிய மக்களின் குரலை வலுப்படுத்த தொடங்கப்பட்ட செய்திதாள் நிறுவனம் தனியார் தொழிலாளாகவும், காந்தி குடும்பத்தின் ஏடிஎம்-ஆகவும் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஜாமீனில் உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று தோல்வியடைந்துள்ளனர். சட்டம் தன் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.