சென்னை: 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள பதிவில், “2015 ஆம் ஆண்டு, ஏப்ரல் 15 ஆம் தேதி பெய்த மழையை போலவே இன்றும் சென்னையில் கனமழை பெய்தது. 2015 ஏப்ரலில் ஏற்பட்ட மேக வெடிப்பால் சென்னையில் 10 செ.மீ என்ற அளவில் மழை பதிவானது. என்னே வியப்பு! இயற்கை சில விஷயங்களை இப்படி நினைவு வைத்துக் கொள்கிறது. அன்றைய தினம் போல் இன்றும் சென்னையில் மழை பெய்கிறது. அடர் மேகக் கூட்டம் இருப்பதால், சென்னைக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.