புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
உஜ்வாலா மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்கள் என இரு தரப்புக்கும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.503-ல் இருந்து ரூ.553 ஆகவும், பொது பயனர்களுக்கு ரூ.803-ல் இருந்து ரூ.853 ஆகவும் அதிகரிக்கும். இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. எனினும், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விலைக் குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த வரி அதிகரிப்பு நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,” என்று எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி அரசு தனது 11 ஆண்டு கால ஆட்சியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்த போதெல்லாம் கலால் வரியை உயர்த்தி இருக்கிறது. நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. மொத்தத்தில், அந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.77 ஆகவும், டீசலுக்கான வரி லிட்டருக்கு ரூ.13.47 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, 2014-15 ஆம் ஆண்டில் ரூ.99,000 கோடியாக இருந்த கலால் வரி வசூல், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.2,42,000 கோடியாக உயர்ந்தது.
2017 அக்டோபரில் கலால் வரியில் 2 ரூபாயை அரசு குறைத்தது. ஒரு வருடம் கழித்து மேலும், ரூ.1.50 குறைத்தது. அதன் பின்னர், ஜூலை 2019 இல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. மீண்டும் மார்ச் 2020 இல் லிட்டருக்கு கலால் வரியில் ரூ.3 உயர்த்தியது. மார்ச் 2020 முதல் மே 2020 வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ.13 மற்றும் ரூ.16 உயர்த்தப்பட்டது. எனினும், அந்த வரி உயர்வை திரும்பப் பெற்றது.
கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு, அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்தது. டெல்லியில் பெட்ரோலின் தற்போதைய விலை ரூ.94.77 ஆகவும், டீசலின் விலை ரூ.87.67 ஆகவும் உள்ளது.