Site icon Metro People

தீபாவளி | தமிழகம் முழுவதும் அரசு மருத்துமனைகளில் தீக்காய சிகிச்சை பிரிவு – தயார் நிலையில் வைக்க உத்தரவு

தீபாவளி பண்டிகையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்கவும், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைப்பது குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளார்.

இதில், “பட்டாசு வெடிப்பதால் தீக்காயங்கள் மற்றும் சாலை விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கான பாதிப்பு அதிகரிக்க கூடும் என்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீக்காயங்களுக்கான மருந்துகளை போதிய அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கள நிலவரத்தை பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து அனுப்ப வேண்டும்.

பொதுமக்கள் பட்டாசு வெடித்தலில் ஈடுபடும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் கவனமாக கையாள வேண்டும், கைகளில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. காலணி அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். அருகில் பாதுகாப்பிற்காக தண்ணீரை வைத்துக் கொள்ள வேண்டும். மின்சார ஒயர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது. தீக்குச்சி மற்றும் கேண்டில்கள் உதவியுடன் பட்டாசு வெடிக்க கூடாது” என்பன உள்ளிட்ட பொதுவான வழிகாட்டுதல்களை அவர் வழங்கியுள்ளார்.

Exit mobile version