புதுச்சேரியில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் அமைப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நாஜிம் இன்று(ஏப்.4) செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் “சென்டாக்” அமைப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதன் காரணமாக உரிய தகுதிகள் இருந்தும் மருத்துவம் படிக்க விரும்பிய புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சிறந்த அதிகாரி ருத்ர கவுடா சென்டாக் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார். தவறுகளுக்கு அவர் காரணமாக இருக்க மாட்டார்.
ஆனால் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டறிய வேண்டிய கடமை அரசுக்கும், பொறுப்பாளருக்கும் உள்ளது. புதுச்சேரியில் 2 மருத்துவக் கல்லூரிகள் சிறுபான்மை கல்லூரிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து இடங்களையும் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று 14.02.2022 அன்று புதுச்சேரி நலவழித்துறை உத்தரவிட்டது. ஆனாலும் ஏதோ குளறுபடிகளால் தற்போதைய மாணவர் சேர்க்கையில் இந்த உத்தரவின்படி சேர்க்கை நடைபெறவில்லை.
இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடங்களை வேறு மாநிலங்களைச் சேர்ந்தோர் பெற்றுள்ளனர். நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததற்கு காரணமே இங்குள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அந்த நோக்கம் தற்போது நிறைவேறவில்லை. புதுச்சேரி அரசுக்கான ஒதுக்கீட்டை கூட நம்மால் பெற முடியவில்லை என்றால், எங்கே தவறு நடக்கிறது என்று முதல்வர் விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அகில இந்திய கால்நடை மருத்துவக் கழகம், நிகழாண்டில் புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு 100 இடங்கள் என அறிவித்துவிட்டது. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்டுவிட்டன. 85 இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்ற நிலையில் புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் 68 இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளது. மீதமுள்ள இடங்களில் புதுச்சேரி மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.