Site icon Metro People

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முகாந்திராம் இல்லை என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி , மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது புகாரின் பேரில் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜோசப்பின் புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி ராசா மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என அறிக்கை அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் வேண்டுமானால் கீழமை நீதிமன்றத்தை அணுக அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Exit mobile version