Site icon Metro People

“முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்கக் கூடாது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2022) பிற்பகல் 12.00 மணியளவில் கரூர், சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, காவிரி கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது. மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள், நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

அனைத்து நிலை அலுவலர்களும் கரையோரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். சில இடங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் வீணாவதாக செய்திகள் வருகின்றன. நெல் மூட்டைகள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும். நெல் மூட்டைகளை சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதங்கள் ஏற்பட்டிருந்தால், உடனே நேரடி களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version