சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழக சட்டதிட்ட விதி: 17 – பிரிவு :3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். அது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து
விடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
என்ன பேசினார் பொன்முடி? கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்து மதத்தின் சைவ, வைணவ மார்க்கங்கள் பற்றியும், பெண்களைப் பற்றியும் இழிவாகப் பேசியுள்ளர். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. இந்நிலையில், பொன்முடி பேச்சை ‘அருவருப்பானது’ என்று குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி இன்று காலை எக்ஸ் சமூகவலைதளத்தில் கண்டன ட்வீட் செய்திருந்தார். இத்தகைய சூழலில் அதிரடி அறிவிப்பாக பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்தும் அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எச்சரிக்கை சமிக்ஞை! திமுகவில் அடுத்தடுத்து வெளியான இந்த அறிவிப்புகள் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. வரும் 2026 மே மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் கட்சியில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவுகள் நாவடக்கம் தொடர்பாக கட்சியினருக்கு, அமைச்சர்களுக்கு கடத்தப்படும் எச்சரிக்கை சமிக்ஞை என்று அரசியல் நிபுணர்களால் விமர்சிக்கப்படுகிறது.