புதுடெல்லி: மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா – இங்கிலாந்து நாடுகளிடையேயான பொருளாதாரம், நிதி தொடர்பான அமைச்சர்கள் நிலையிலான 13-வது ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்ரல் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இவ்விரு நாடுகளிலும் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியா-இங்கிலாந்து நாடுகளிடையேயான பொருளாதாரம், நிதி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 9-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. இவ்விரு நாடுகளின் நிதியமைச்சர்கள் தலைமையில் இந்த 13-வது சுற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த இரு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களில் பணிக்குழுக்கள், முதலீடுகள், நிதிசார் சேவைகள், நிதி நடவடிக்கைகளுக்கான விதிமுறைகள் ஒருங்கிணைந்த பண பரிவர்த்தனை செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும் நிதிசார் பரிவர்த்தனைகள், வரி விதிப்பு, சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தனது இங்கிலாந்து பயணத்தின்போது ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள், நிதிச் சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் சர்வதேச அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து முதலீட்டாளர் வட்டமேஜை மாநாட்டிலும் நிதியமைச்சர் உரையாற்றுகிறார்.
தனது பயணத்தின் 2வது கட்டமாக ஆஸ்திரியா செல்லும் நிதியமைச்சர், அந்நாட்டு நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் உட்பட மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.