Site icon Metro People

நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு ட்ரோன்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக 6 ட்ரோன் இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணியாளர்களிடம் வழங்கினார்.

சென்னை மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில், மொத்தம் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியினை கட்டுப்படுத்த பொது சுகாதாரம் பூச்சி தடுப்புத் துறையில் 68 எண்ணிக்கையிலான வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரிய புகை பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 240 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகை பரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கொசுப்புழு உற்பத்தியில் நீர்வழித்தடங்களில் கொசுக்களை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய 300 கைத் தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத் தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்யின் மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப்புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெரு நிறுவன சமுக பங்களிப்பு (CSR) நிதியின் கீழ் தலா ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 ட்ரோன் இயந்திரங்களையும் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் பணியாளர்களிடம் வழங்கினர்.

Exit mobile version