‘இது என் ஊர்; என் மைதானம்’ – ஆர்சிபிக்கு எதிராக வெகுண்டெழுந்த கே.எல்.ராகுல்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட இதுவரை தோல்வியை தழுவவில்லை. வியாழக்கிழமை அன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் டெல்லி வீரர் கே.எல்.ராகுல்.

பெங்களூரு மண்ணின் மைந்தனான அவர், 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை ராகுல் விளாசி இருந்தார். டெல்லி அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஸ்டப்ஸ் உடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அது டெல்லி அணிக்கு வெற்றி கூட்டணியாக அமைந்தது.

சிறப்பான இன்னிங்ஸ் ஆடிய ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். “இது என்னுடைய சொந்த ஊர். என்னுடைய ஹோம் கிரவுண்ட். என்னை விட இந்த மைதானம் குறித்து யாரும் அவ்வளவு நன்றாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு விளையாடுவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என அவர் கூறினார். ஆர்சிபி உடனான வெற்றியை மிகவும் ஆக்ரோஷத்துடன் ராகுல் கொண்டாடினார். வழக்கமாக களத்தில் இது மாதிரியான உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்த மாட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

32 வயதான ராகுல், கடந்த 2013-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப், லக்னோ அணிகளில் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். மொத்தம் 4868 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக ராகுல் செயல்பட்டார். அதில் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் லக்னோ படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டம் முடிந்ததும் மைதானத்திலேயே லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது அதிருப்தியை மிகவும் காட்டமான முறையில் ராகுல் வசம் வெளிப்படுத்தினார். ‘ஆர்சிபி அணிக்கு வரவும்’ என ராகுலுக்கு ஆர்சிபி ரசிகர்கள் தூது விட்டனர்.

உள்ளூர் கிரிக்கெட்டில் கர்நாடக மாநில அணிக்காக ராகுல் விளையாடி வருகிறார். அவர் பெங்களூருவை சேர்ந்தவர். தன் மாநிலத்தை சேர்ந்த ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டுமென தனது விருப்பத்தை ராகுல் வெளிப்படுத்தியது உண்டு. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ராகுலை டெல்லி அணி ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.