சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து சரக்குகளை கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக தலைவர் சுனில்பாலிவால் கூறியுள்ளார்.
சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 2024-25-ம் நிதியாண்டில் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் தொடர்பாக சென்னை துறைமுக ஆணையத்தில் உள்ள அரங்கில் இன்று (ஏப்.3) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் நிறுவன தலைவர் சுனில்பாலிவால் கூறியது: “சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்கு கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்களையும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன்களையும் கையாண்டது. இது ஆண்டுக்கு ஆண்டு 6.7 சதவீதம் ஒருங்கிணைந்த அதிகரிப்பைக் குறிக்கிறது. சென்னை துறைமுகம் ஆண்டுக்கு ஆண்டு 6.5 சதவீதம் அதிகரிப்பதையும், காமராஜர் துறைமுகம் 6.9 சதவீதம் அதிகரிப்பையும் காட்டுகிறது.
சென்னை துறைமுகத்தின் செயல்பாடுகள் மூலமாக வருவாய் ரூ.1,088.22 கோடியை எட்டியுள்ளது. காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மூலமாக வருவாய் ரூ.1,130.60 கோடி ஈட்டியுள்ளது. காமராஜர் துறைமுகம் ரூ.545.95 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தை பதிவு செய்து, முதல் முறையாக ரூ.500 கோடி வரம்பைத் தாண்டியது. இரண்டு துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வர்த்தக வசதிக்கு முயற்சி எடுக்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே 4-வது உயர்மட்ட வழித்தட திட்டம் (ரூ.3,570 கோடி செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர, பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன,” என்று அவர் கூறினார்.பேட்டியின் போது, சென்னை துறைமுகம் ஆணையத்தில் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.