புதுடெல்லி: நான் மீண்டும் வங்கதேசம் வருவேன் என தனது கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் பிரதமராக பதவி வகித்த அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு (77) எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினருடன் சமூக வலைதளம் மூலம் ஹசீனா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: வங்கதேச மக்கள் மீது அக்கரை இல்லாதவர் இப்போது இடைக்கால அரசை வழிநடத்துகிறார். முன்பு சிறிய தொகையை மக்களுக்கு கடனாக கொடுத்து அதிக வட்டி வசூலித்தார். இதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வெளிநாட்டில் ஆடம்பரமாக வசித்தார். அப்போது அவருடைய ஏமாற்று வேலையை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனவே, அவருக்கு அரசு நிறைய உதவி செய்தது. ஆனால் மக்கள் பலனடையவில்லை. அவர் தனக்கு நல்லவற்றை செய்துகொண்டார். அப்போது அவருக்கு உருவான அதிகார மோகத்தால் இப்போது வங்கதேசம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
வளர்ச்சிக்கான மாதிரியாக விளங்கிய வங்கதேசத்தை அவர் தீவிரவாதிகளின் தேசமாக மாற்றிவிட்டார். நம்முடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விவரிக்க முடியாத வகையில் கொல்லப்படுகிறார்கள். நம் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் அடக்கு முறைக்கு உள்ளாகிறார்கள்.
வங்கதேசத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கொலை, வழிப்பறி உள்ளிட்ட செயல்கள் பற்றிய செய்திகள் வெளியில் வருவதில்லை. அவ்வாறு மீறி வெளியிடப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மிரட்டலுக்கு உள்ளாகின்றன.
இதையெல்லாம் அல்லா சகித்துக் கொள்ள மாட்டார். உங்களுக்கு நீதி கிடைக்கும். குற்றச் செயலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள். இது என்னுடைய வாக்குறுதி. நான் மீண்டும் வங்கதேசம் வருவேன். அதற்காகத்தான் அல்லா என்னை உயிருடன் வைத்திருக்கிறார் என்று கருதுகிறேன். இவ்வாறு ஹசீனா தெரிவித்தார்.