ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் விடுபட்ட சான்றிதழ்களை வரும் 19-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நேர்காணல் இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் பங்கேற்க ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டன. அதில், வேளாண் அலுவலர், காப்பாட்சியர், உதவி சுற்றுலா அலுவலர் உள்ளிட்ட 19 வகையான பதவிகள் பிரிவில் சில சான்றி தழ்கள், ஆவணங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்படாமலும், குறைபாட்டுடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய தேர்வர்கள் ஏப்ரல் 19-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள், விடுபட்டவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யவும், குறைபாடுகளை சரி செய்து மீண்டும் பதிவேற்றவும் கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அவர்களது பதிவெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள், ஆவணங்களை அவர்கள் தங்களது ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். இல்லாவிட்டால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.