சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. வரும் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மாநகராட்சி கல்வி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக கருதப்படுகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள், 32 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை தவிர மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கக்கூடிய வசதிகள் இருக்கின்றன. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு வரை மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 88 ஆயிரம், 95 ஆயிரம் என்ற எண்ணிக்கையில்தான் இருந்து வந்தது.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலா
னோர் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மடிக்கணினி, சைக்கிள்உள்பட 16 விதமான நலத்திட்ட உதவிகள் மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்க வைக்க தொடங்கினர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த இயலாதது இதற்கு முக்கிய காரணம்.
அதோடு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதும் இன்னொரு காரணம்.
கடந்த கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) தனியார் பள்ளிகளைப் போன்று ஆன்லைன் வாயிலான மாணவர் சேர்க்கை முறையையும் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறும்போது, “கடந்த கல்வி ஆண்டை போலவே இந்த கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இது வரையில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் நடைபெறும். விஜயதசமி அன்றும் மாணவர் சேர்க்கை கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எனவே, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாநகராட்சி பள்ளிகள் முன் மாணவர் சேர்க்கை பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்
சேர்க்கை தொடர்பான நோட்டீஸ்களும் அச்சடிக்கப்பட்டு வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பள்ளிகளில் உள்ள நவீன வசதிகள், தரமான கல்வி, அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களும் வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயன்று வருகின்றனர்.
தற்போது பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் இயங்குவதால் அக்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்” என்று தெரிவித்தனர்.