மதுரை: தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப்.7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சமீபத்தில் கோயிலில் நூறு டிராக்டருக்கும் மேல் மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. அரசு நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் அளித்த புகார்கள் விசாரிக்கப்பட்ட போது கோயில் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரசின் நிதியில் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் ராஜகோபுரத்தில் பழுது சரிசெய்யப்படாமலேயே வண்ணம் பூச்சு பணி நிறைவடைந்துள்ளது. எனவே, கோயிலில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியும் வரை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தடை விதித்தும், கோயில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்கு அரசு வழங்கிய நிதியில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
எனவே அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலின் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், கோயில் புனரமைப்பு பணிக்காக அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கும்பாபிஷேகத்துக்கு இடைக்கால தடை விதித்தும், சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், அரசு தரப்பில் கோரிக்கை வைத்ததையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், “ராஜகோபுரம் பகுதியில் வெளிப்படையாகத் தெரிந்த வெடிப்புகளை மட்டும் சரி செய்துள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், “கோயில் புனரமைப்புக்கான நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயில் திருவிழாவின் போதும் இதுபோல ஏதாவது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ராஜகோபுரம் உள்பட கோயிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. கும்பாபிஷேகத்தை நிறுத்துவதற்கான எந்த தேவையும் இல்லை.
கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் ஐஐடி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கட்டும். நேற்று கணபதி ஹோமம் முடிந்துள்ளது. கணபதி ஹோமம், முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்தை நிறுத்துவது சரியல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டனர்